Regional01

பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிய உணவகங்கள், ஜவுளிக் கடைகளில் சிறப்பு கவனத்துடன் கணக்கெடுப்பு பணி கிருஷ்ணகிரி ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

நேற்று தொடங்கிய பள்ளி செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி டிசம்பர் 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. இக்கணக்கெடுப்பு பணியில் எந்தெந்த பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகமாக இருக்கிறார்களோ அப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து குழு பார்வை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக உணவகங்கள், பேருந்து நிலையம், விவசாய நிலப் பகுதிகள், வயல்வெளிகள், கட்டுமானப் பணிகள் சார்ந்த இடங்கள், செங்கல் சூளை, தொழிற்சாலைகள், ஜவுளிக் கடைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நரிக்குறவர் மற்றும் நாடோடிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு குழுவாகச் சென்று சிறப்பு கவனம் செலுத்தி கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.

எந்தெந்த பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிவதில் சிரமம் நிலவுகிறதோ அப்பகுதிகளில் பிறதுறை அலுவலர்களுடன் இணைந்து கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT