தொன்மையான கோயில் சிலைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் பழமையான கோயில்களில் உள்ள ஐம்பொன் உள்ளிட்ட தொன்மையான சிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, மாவட்டந்தோறும் இரவு நேர பாதுகாவலர்களாக முன்னாள் ராணுவத்தினரை கடந்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.
இதையடுத்து, முன்னாள் ராணுவத்தினரை காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பயன்படுத்தினால், அவர்களை தேர்தல் உள்ளிட்ட பிற பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி, பழமையான கோயில்கள் அதிகம் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு நேர பாதுகாவலர்களாக முன்னாள் ராணுவத்தினர் 70 பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு ஆரம்ப கால தொகுப்பூதியம் ரூ.1,500 வழங்கப்பட்டது. பின்னர், கடந்த 1.1.2016 முதல் ரூ.8 ஆயிரமாக தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டது.
ஆனால், இந்த உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படாத நிலையில், கடந்த 7 மாதங்களாக மாத ஊதியமும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில், முன்னாள் ராணுவத்தினர் கோயில் பாதுகாவலர் நலச் சங்கத்தினர் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், அச்சங்கத்தின் தலைவர் அறிவழகன், மக்கள் தொடர்பாளர் ஜெயபாலன் ஆகியோர் கூறியதாவது:
கோயில்களில் உள்ள சிலைகள் உள்ளிட்ட விலை மதிக்கமுடியாத பொருட்களை இரவு நேரத்தில் காவல் காத்துவரும் முன்னாள் ராணுவத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் 23 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கோயில்களில் 70 பேர் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,36,200 மற்றும் கடந்த ஏப்ரல் முதல் 7 மாத ஊதியம் ஆகியவை வழங்கப்படாமல் உள்ளது.
இதுதொடர்பாக தமிழக துணை முதல்வர், நிதித் துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர், அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என எல்லோரிடமும் முறையிட்டும், எங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. பிற மாவட்டங்களில் எங்களைப் போன்று கோயில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், உயர்த்தப்பட்ட ஊதியத்தை பெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நிலுவைத் தொகை வழங்க போதிய நிதியில்லை என காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினர் கூறுகின்றனர்.
இந்தப் பணியை நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்தால், கோயில்களில் உள்ள சொத்துகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். எனவே, எங்களுக்குரிய நிலுவைத் தொகை மற்றும் 7 மாத ஊதியத்தை பெறுவதற்காக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.