திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிறுமியின் வீடு அருகே வசித்த கிருபானந்தம் (19) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரித்து, கிருபானந்தத்தை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வடமதுரை காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த புதிய மனுவில் கூறியிருப்பதாவது: கிருபானந்தம் ஆடையில் இருந்த ரத்த மாதிரியும், சிறுமியின் பெற்றோரின் ரத்த மாதிரியும் மரபணுச் சோதனையில் ஒத்துப் போகிறது. இதன் அடிப்படையில் கிருபானந்தத்துக்கு தண்டனை வழங்க வேண்டும். தற்போது அவர் வெளியே இருக்கிறார். சிறுமியின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடியும் வரை கிருபானந்தத்தை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக கிருபானந்தம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.