ஆந்திராவைப் போல் பாலியல் குற்றவாளிகளை 21 நாட்களில் தண்டிக்க, தமிழகத்தில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரிடம் மனு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், நீதிபதியுமான வி.தீபாவிடம் வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், திருநங்கை பாரதி கண்ணம்மா, சமூக சேவகர் ஜெயா அழகேசன், சட்டக்கல்லூரி மாணவிகள் காயத்திரி, கார்த்திகா மணி உள்ளிட்டோர் அளித்த மனு:
ஆந்திர மாநிலத்தில் பாலியல் வழக்குகளை 21 நாட்களில் விசாரித்து முடிக்கும் வகையில் ‘திஷா’ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
அதன்படி போலீஸார் 7 நாட்களில் விசாரணையை முடித்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், 14 நாட்களில்ல் நீதிமன்றத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இதனால் குற்றவாளிகள் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பது தவிர்க்கப்படும். தமிழகத்திலும் இதுபோன்ற புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.