மதுரையில் ஜவுளிக்கடை மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களில் தீ தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்வதில், தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரிய மனுவை பரிசீலிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் வழக் கறிஞர் ஏ.கண்ணன் காணொலிக் காட்சியில் ஆஜராகி, மதுரையில் தீபாவளியன்று தெற்குமாசி வீதியில் ஏற்பட்ட ஜவுளிக் கடை தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் இருவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் கூறுகையில், தீ விபத்துச் சம்பவத்தை அடுத்து மதுரை நகர் பகுதிகளில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாத கட்டிடங்களைத் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். நூறுக்கும் மேற்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர் களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
பெரும்பாலான கட்டிடங்களில் விதிமீறல்கள் இருப்பது தெரிந்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. முறையாக ஆய்வு செய்திருந்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது. இதனால், மதுரையில் ஜவுளிக்கடை மற்றும் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களில் தீ தடுப்பு முறைகள் பின்பற்றப்படு கிறதா? என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்து உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றார். இக்கோரிக்கையைப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.