Regional02

தஞ்சாவூர் வேளாண்மை கோட்டத்தில் சம்பா, தாளடிக்கு டிச.15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை

செய்திப்பிரிவு

நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிச.15-ம் தேதிக் குள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர்க் காப்பீட்டு திட்டம்

செயல்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.32,550 ஆகும்.

விவசாயிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பயிர்க் காப்பீடு செய்துகொள்ளலாம்.

இதற்கு முன்மொழிவு விண்ணப்பத்துடன் கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் 1430-ம் பசலிக்கான அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து ஒரு ஏக்கருக்கு ரூ.489 வீதம் பிரீமியம் செலுத்தி பதிவு செய்து உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

ஆவணங்களின் நகல்கள் எழுத்துகள் தெளிவாக இல்லை எனில் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் சென்று சரியான தகவல்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பித்தவுடன் அதற்கான ரசீதைப் பெற்று அனைத்து விவரங்களும் சரியாக பதியப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

காலக்கெடு தேதிக்கு முன் இயற்கை இடர்பாடுகள் ஏதும் ஏற்பட்டு சேதம் ஏற்படுமாயின் அதன்பிறகு காப்பீடு செய்ய இயலாது என்பதால் கடைசி நேரத்தில் விண்ணப்பிக்காமல் முன்கூட்டியே காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT