திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தில் வெண்ணாற்றில் சாக்கு மூட்டை ஒன்றில் இளம்பெண் சடலம் கடந்த 16-ம் தேதி கரை ஒதுங்கியது.
நீடாமங்கலம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். அப்போது, சடலம் கட்டப்பட்டிருந்த சாக்கு மூட்டையில் மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு ஜவுளிக்கடையின் பெயர் இருந்தது. இதையடுத்து, அந்தக் கடையின் உரிமையாளர் அம்ச கர்ணன் (44) என்பவரை போலீஸார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்தது அவரது முதல் மனைவி சுதா(38) என்பது தெரியவந்தது. மேலும், அம்ச கர்ணன் சத்யா என்ற பெண்ணை 2-ம் திருமணம் செய்துள்ளார்.
இதனால், முதல் மனைவி சுதாவுக்கும், அம்ச கர்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், சுதாவை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று, சாக்கு சாக்குமூட்டையில் வைத்து கட்டி வெண்ணாற்றில் வீசியதை அம்ச கர்ணன் ஒப்புக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரை நேற்று போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.