மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி வன்முறை நிகழாமல் தடுக்க பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இறுதி முடிவுகள் மாலை 4 மணிக்குள் தெரிந்துவிடும்.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 66.38 சதவீத வாக்குகள் (55 கோடி) பதிவானது. மொத்தம் 543 தொகுதிகளில் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். மாலை 4 மணிக்குள் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
பலத்த பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள 989 மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினரும், மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கும் எண்ணும் பணியில் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த 10 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
இதற்கிடையே பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்ச கம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் ஹைதராபாதிலும், மீரட்டிலும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் மீது தாக்கு தல் நடத்த நக்ஸலைட்கள் திட்டமிட் டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நக்ஸல் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் கருவி உள்ளிட்டவற்றுடன் தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்பாடுகள் தயார்
தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், 543 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் 5 நிமிடத்துக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி யுள்ளன. அதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.