சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை ஒட்டிய இணைப்பு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகரில் நான்கு ரோடு, ஐந்து ரோடு, சாரதா கல்லூரி சாலை ஆகியவற்றில் நிலவிய போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், சாலை சந்திப்புகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய பிரச்சினை இல்லாமல், வாகனங்களில் பயணிக்க முடிவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ஈரடுக்கு பாலத்தின் அருகே உள்ள சர்வீஸ் ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:
நான்கு ரோடு மேம்பாலத்தினை ஒட்டியுள்ள சர்வீஸ் ரோடு, மேம்பால சாலையுடன் இணையும் இடத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் இடையூறாக உள்ளது. இந்த இடத்தில், சர்வீஸ் ரோட்டில் வரக்கூடிய வாகனங்களும், மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்களும் சந்திக்கும் இடமாக உள்ள நிலையில், சாலையில் போதுமான அகலம் இல்லாததால், நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல, நான்கு ரோடு மேம்பாலத்தின் கீழே குழந்தை ஏசு பேராலயத்தை ஒட்டிச் செல்லும் சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், இந்த சாலையில், நான்கு சக்கர வாகனங்கள் செல்வது மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, இவ்விரு இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.சேலம் 4 ரோடு குழந்தை ஏசு பேராலயம் அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாததால் குறுகிய சாலையில் சிரமத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்.