கருமந்துறை தோட்டக்கலைத்துறை பண்ணையில் வெங்காய விதை உற்பத்திக்காக பயிரிட்டப்பட்டுள்ள வெங்காய நாற்றுகள். 
Regional01

தோட்டக்கலைத் துறையில் காய்கறி, வெங்காய விதைகள் உற்பத்தி விவசாயிகள், பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறையின் 5 அரசுப் பண்ணைகளில் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவையான தரமான காய்கறி விதைகள், வெங்காய விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டம் கருமந்துறையில் 1,037 ஏக்கர் பழப்பண்ணை, மணியார் குண்டம் பகுதியில் 250 ஏக்கர் பண்ணை, ஆத்தூர் அடுத்த முள்ளுவாடியில் பண்ணை, அருநூத்துமலையில் 20 ஏக்கர் பண்ணையில் காய்கறி விதை உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருமந்துறை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சக்கரவர்த்தி கூறியதாவது:

தமிழக அரசின் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை அரசுப் பண்ணைகளில் காய்கறிகளின் விதை உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் 5 பண்ணைகளில் 35.4 டன் விதை உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

கத்தரி, தக்காளி, வெண்டை, பூசணி, புடலை, பொரியல் தட்டை, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் தரமான விதைகளை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் தொடங்கி, இதுவரை 2.5 டன் காய்கறி விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் வெங்காய விலை அதிகபட்சமாக உயர்ந்ததால், விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய, சிறிய வெங்காயம் விதை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டு, வெங்காய நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு பிப்ரவரியில் வெங்காய நாற்றுகள் தயாராகி விற்பனைக்கு வந்துவிடும்.

காய்கறி விதைகள் தோட்டக் கலைத் துறையின் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும். வீடுகளில் அமைக்கப்படும் மாடித்தோட்டத்துக்கான காய்கறி விதைகளை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT