மதுரை அருகே தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகி கொலை வழக்கில் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வெள்ளரிப் பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்(32). தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகியான இவர் கடந்த 15-ம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள அவரது கோழிப்பண்ணையில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த மாரிமுத்து(24), வெள்ளரிப்பட்டி விஜய் சுந்தர்(24), மதுரை ஆலாத்தூர் அறிவ ழகன்(32), நெல்லியேந்தல் பட்டிபாபு(26) ஆகியோர் நான்குவழிச் சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இவர்கள் முத்துக்குமரனின் கோழிப்பண்ணையில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதைத் தட்டிக் கேட்ட முத்துக்குமரனுக்கும், மற்ற நான்கு பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி அன்று முத்துக்குமரனின் மைத்துனர் பூபாலன் என்பவருக்கும், மாரிமுத்து, விஜய் சுந்தர், அறிவழகன், பட்டி பாபு ஆகியோருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற் றுக்கிழமை முத்துக்குமரன் தனது கோழிப் பண்ணைக்குச் சென்றார். அப்போது அவரிடம் பூபாலனுடன் நடந்த தகராறு குறித்து மாரிமுத்து, விஜய் சுந்தர், அறிவழகன், பட்டி பாபு ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முத்துக்குமரன் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சினையில் வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்த பிரபு, சுந்தர் ஆகியோரும் முத்துக்குமரனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர். இவர்களும் கொலைக்கு தூண்டுதலாக இருக்கலாம் என முத்துக்குமரனின் மனைவி பிரியதர்ஷினி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் மாரிமுத்து, விஜய் சுந்தர், அறிவழகன், பட்டிபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரபு, சுந்தர் ஆகியோரை தேடி வருகின்றனர்.