விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் ஆவின் பால் குளிர் பதனீட்டு நிலையம் உள்ளது. இங்கு உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் தொகை வழங்கு வதிலும், கொள்முதலின்போது பால் அளவீடுகளில் முறைகேடு நடப்பதாகவும் கூறி பால் உற்பத்தியாளர்கள் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனீஸ்வரன், மாவட்டச் செயலர் பால முருகன், பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன், ஆவின் பால் குளிர் பதனீட்டு நிலையப் பொறுப்பாளர் அய்யனார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பால் தரம் அளவீட்டுக் கருவிகளில் பழுது உள்ளதாகவும், உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் தரமில்லை எனக்கூறி, அதை விலையில்லாமல் ஆவின் நிர்வாகம் கொள் முதல் செய்வதாகவும், அவ்வாறு தரமில்லை எனக் கூறப்படும் பாலை உற்பத்தியாளர்களிடம் திரும்ப வழங்கு வதில்லை என்றும் பால் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், பால் கொள் முதலில் உள்ள குறைபாடுகள் களையப்படவில்லை எனில், வரும் 30-ம் தேதி முதல் பால் உற்பத்தியை நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறினர்.