தற்போது அதிக அடர்த்தியில் மழை பெய்து வருவதால் மழை நீர் வடிகால்களில் செல்வது சிரமமாக உள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை துரைச்சாமி நகர், வானமாமலை நகர், சொக்கலிங்க நகர் ஆகிய பகுதிகளில் தேங்கி யுள்ள மழை நீரை அகற்றும் பணியை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று பார்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் வடகிழக்குப் பருவ மழை தற்போது பெய்து வருகிறது. இதனால் மழை நீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கி உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள் மூலம் புதிய சாலைகள் உயரமாக போடப்பட்டுள்ளன. ஆனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் தாழ்வாக உள்ளன. இந்த சாலைகளை உயர்த்தினால் வீடுகள் பள்ளமாகி அதிக பாதிப்பு ஏற்படும்.
தற்போது வானமாமலை நகர், துரைச்சாமி நகர், வேலுச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சாலை தாழ்வாக உள்ளது. தற்போது அதிக அடர்த்தியில் மழை பெய்து வருவதால் மழை நீர் வடிகால்களில் செல்வது சிரமமாக உள்ளது.
எனவே இப்பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் இரண்டு கிணறுகளை அமைத்து மழை நீரை சேகரித்து மோட்டார் மூலம் பம்ப் செய்து அருகில் உள்ள மழை நீர் வாய்க்காலில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நிதி மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து உடனடியாக வழங்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவி்ததார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.