திருப்பத்தூர் பேரூராட்சியில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளருக்கு நிரந்தரப்பணி உத்தரவை 6 வாரங்களுக்குள் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த டி.மாரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருப்பத்தூர் பேரூராட்சியில் 2016 முதல் சுய உதவிக்குழு மூலம் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். நிரந்தரப் பணியிடத்தில் என்னை நியமிக்க மனு அளித்தேன். எனக்குப் பதிலாக கவுன்சிலரின் மனைவி பத்மாவதியை தூய்மைப் பணியாளராக நியமித்தனர். இந்நிலையில் 4 தூய்மைப் பணியாளர் நியமனம் தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வெளியிட்டார். அதற்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன். ஓசி (முன்னுரிமை இல்லாதோர் பிரிவு) பிரிவில் என்னை தூய்மைப் பணியாளராக நியமிக்கலாம். ஆனால், அந்த இடத்தில் மாயழகு என்பவரை நியமிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எனவே, 16.3.2020-ல் நடந்த நேர்முகத் தேர்வின் அடிப்படையில் என்னை ஓசி (முன்னுரிமை இல்லாதோர் பிரிவு) பிரிவில் தூய்மைப் பணியாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 11 ஆண்டுகளாகத் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்குத் தூய்மைப் பணியில் அனுபவம் உள்ளது. கடந்த முறையும் நிரந்தரப் பணியிடத்தில் தன்னை நியமிக்க மனு அளித்துள்ளார். அவருக்குப் பதிலாக கவுன்சிலர் மனைவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்முறையும் மனு அளித்துள்ளார். நேர்முகத் தேர்விலும் பங்கேற்றுள்ளார். எனவே, மனுதாரர் 11 ஆண்டுகளாகப் பணிபுரிவதைக்கருத்தில் கொண்டு செப். 7-ல் அளித்த மனுவைப் பரிசீலித்து 6 வாரங் களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.