தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, பெங்களூரு நகரம், ஊரகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 408 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 648 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவும் 648 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கெலவரப் பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. அணையின் நீர் மட்டம் தற்போது 40.02 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை, கெலவரப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு ஆகியவற்றால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 363 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 402 கனஅடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றிலும், பாசனக் கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நெடுங்கல்லில் 22 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாரூர் 20.4 மிமீ, போச்சம்பள்ளி 20, சூளகிரி 17, பெனுகொண்டாபுரம் 11.4, ஊத்தங்கரை, ஓசூர், ராயக் கோட்டையில் 11, கிருஷ்ணகிரி 10.4, தளி 10, தேன்கனிக்கோட்டை 9, அஞ்செட்டி 7.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.