Regional02

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்க தபால் துறை ஏற்பாடு

செய்திப்பிரிவு

ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு ஆயுள் சான்றிதழை பெறுவதற்கு தபால் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப் பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் கருவூல அலுவலகத்துக்கு நேரில் சென்று தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் மஸ்டரிங் பதிவு செய்ய வேண்டும். தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், ஓய்வூதியர்கள் சிரமமின்றி மத்திய அரசின் ஜீவன் பிரமாண் திட்டத்தின் கீழ் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் மூலமாக, மின்னணு உயிர்வாழ் சான்றிதழை (Digital Life Certificate) ஓய்வூதியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால்காரர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களிடம் தங்கள் ஆதார் எண், செல்போன் எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலமாக சில நிமிடங்களில் தங்களது மின்னணு உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து விடலாம். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட குறுஞ்செய்தி உடனடியாக ஓய்வூதியர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வந்து விடும்.

மேலும் இந்த சேவையை அனைத்து தபால் நிலையங்களிலும் பெறலாம். இந்த சேவைக்கான கட்டணமாக ரூ.70 வசூலிக்கப்படுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் அனைவரும் இந்த புதிய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT