Regional01

பல்கலை பாடத்திட்டத்தில் அருந்ததிராயின் புத்தகம் இடம்பெறச் செய்ய வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப், ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், மதிமுக பகுதி செயலாளர் கான் முகம்மது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் செல்வானந்த், ஆதிதமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் கலைக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் உள்ளிட்டோர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் அளித்த மனு விவரம்:

சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலம் மூன்றாம் பருவத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் படித்து வந்த, எழுத்தாளர் அருந்ததிராயின் ‘Walking with the Comrades’ என்ற நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக, சட்டநெறிமுறைகளுக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் எதிரானது. பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. மாணவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பொறுப்புணர்வையும், இலக்கியத்திறனையும் கூர்தீட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நூல், இந்தியா உட்பட எந்தவொரு நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. எனவே நீக்கப்பட்ட இந்த புத்தகத்தை தொடர்ந்து பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT