தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே போலீஸார் தாக்கியதில் இளைஞர் இறந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நேற்று சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்த மந்திரம் மகன் மகேந்திரன் (28). இவரை ஒரு கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் கடந்த மே 23-ம் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றனர். மறுநாள் விடுவிக்கப்பட்ட மகேந்திரன் ஜூன் 11-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
விசாரணையின் போது போலீஸார் கடுமையாக தாக்கியதால் தான் மகேந்திரன் இறந்ததாக கூறி அவரது தாய் வடிவு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் இந்தவழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் நிலை அறிக்கையை ஏற்கனவே நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சில சாட்சிகளிடம் மேலும் விசாரணை நடத்தவேண்டியிருந்ததால் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளத்துக்கு சென்று மகேந்திரனின் உறவினர்கள் 6 பேரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதுபோல் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (32) என்பவர் கடந்தசெப்டம்பர் மாதம் 17-ம் தேதிகாரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். நிலத்தகராறு காரணமாக செல்வனை அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட சிலர் கடத்திக் கொலை செய்ததாக புகார் எழுந்தது. கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கும் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்றுடிஎஸ்பி தலைமையிலான போலீஸார் சொக்கன்குடியிருப்பு பகுதிக்கு சென்று இந்த வழக்கின் சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.