இதர மாநிலங்கள்

மோடி பிரதமரானால் காஷ்மீர் துண்டிக்கப்படும்: ஒமர் அப்துல்லா

பிரவீன் சுவாமி

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அளித்த பிரத்யேக பேட்டியில்: "நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஜம்மு காஷ்மீரை இந்திய தேசத்தில் இருந்து துண்டித்துவிடும்" என கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 திருத்தி அமைக்கப்படும் என்ற மோடியின் வாக்குறுதியை குறிப்பிட்டுப் பேசிய ஒமர், அவ்வாறு நடந்தால் அது இந்தியா என்ற கூட்டமைப்புக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் இடையே பாலமாக உள்ள அரசியல் சாசனத்தை சிதைப்பதாகிவிடும் என தெரிவித்தார்.

அதே போல், புத்த மதத்தவர் அதிகம் வசிக்கும் லடாக் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்படும் என்ற பாஜகவின் வாக்குறுதியையும் ஒமர் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை பிரிக்கும் இத்தகைய முயற்சிகள் மோசமான விளைவுகளை தரும். இதனால் மாநிலத்தில் மத அமைதிக்கு பங்கம் ஏற்படும், உறவுகளில் விரிசல் ஏற்படும். பெரும்பாலான இந்திய மக்களுக்கு இத்தகைய விளைவுகள் குறித்து இன்னும் புரிதல் ஏற்படவில்லை என தோன்றுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த போதும், சட்டப்பிரிவு 370-ஐ திருத்தி அமைப்பது பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், கூட்டணி கட்சிகளின் கொள்கைளுக்கு மரியாதை அளித்து அந்த யோசனையை வாஜ்பாய் புறக்கணித்ததார். வாஜ்பாயும் - நரேந்திர மோடியும் வெவ்வேறு சிந்தனைகள் கொண்டவர்கள் என்றார்.

மேலும், வாஜ்பாய் - நரேந்திர மோடி இருவரையும் சமநிலையில் வைத்து ஒப்பிட்டு பார்க்கமுடியாது. மோடி பச்சை பொய்களையும், பாதி உண்மைகளையும் வைத்து வியாபாரம் செய்பவர்.

காஷ்மீரி பண்டிட்டுகளை வெளியேற்றியதாக என் தந்தை, என் தாத்தா மீது மோடி குற்றம் சாட்டினார். ஆனால், வரலாற்று உண்மை என்னவென்றால், பண்டிட்டுகளுடன் சேர்த்து தேசிய மாநாட்டுக் கட்சியும் பலி கொடுக்கப்பட்டது என்பதேயாகும்.

2002-க்குப் பின்னர் வாஜ்பாயுடனான தேசிய மாநாட்டுக் கட்சியின் உறவு படிப்படியாக சிதைந்தது. 2002 - 2005 காலகட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்போதைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையத்துக்கு ஆதரவாக செயல்பட்டதே விரிசலுக்கு காரணமாக இருந்தது. இவ்வாறு ஒமர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

நரேந்திர மோடியை வலுவாக எதிர்ப்பதன் மூலம், ஒமர் அப்துல்லா மாநிலத்தில் கூடுதல் செல்வாக்கு பெற முடியும் என கூறப்படுகிறது. ஏனெனில், பொதுவாக மத்தியில் ஆளும் அரசை எதிர்க்கும் அரசியல் தலைவர்களுக்கே காஷ்மீரில் அதிக வரவேற்பு என்ற நிலை நிலவுகிறது.

-தமிழில் பாரதி ஆனந்த்

SCROLL FOR NEXT