தி.மலையில் விவசாயிகள் உப்பை கொட்டி நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழவர் பேரவை சார்பில் தி.மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “ஆட்சியரிடம் கால்நடை கொட்டகை பெறுவதற்காக 42 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 60 நாட்களுக்கு மட்டுமே பணிவழங்கப்பட்டுள்ளதால், நடப்பாண் டில் மீதமுள்ள 90 நாட்களுக்கு பணி வழங்க வேண்டும். பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக பாசனக் கால்வாய்களை செப்பனிட வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. அம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், ஆட்சியரின் அறிவிப்பு காரணமாக நீர்ப்பாசன மேலான் திட்டத்தின் கீழ் பயன்பெற தோட்டக்கலை இயக்குநரிடம் 11 மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் மீதும் நடவடிக்கை இல்லை. வேளாண் துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, விவசாயிகளை சென்றடைவதற்கு முன்பாக கரைந்து போகிறது. அதனை சுட்டிக்காட்டும் வகையில் தண்ணீரில் உப்பை கொட்டுவதுபோல் உள்ளது எனக் கூறி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.