ஏற்காட்டுக்கு வரும் பயணிகள் வசதிக்காக இ-பாஸ் நடை முறையை ரத்து செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், ஏற்காட்டில் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 7 மாதங்களாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. அண்மையில் தடை விலக்கப்பட்டது. என்றாலும், சுற்றுலா வரும் வெளி மாநில, மாவட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில், தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி நேற்று ஏற்காட்டுக்கு சேலம், சென்னை, தருமபுரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
இங்குள்ள அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், ஏரித் தோட்டம், தாவரவியல் பூங்கா, காட்சி முனைப் பகுதிகளாக லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட் உள்ளிட்ட இடங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. நேற்று நிலவிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், சாரல் மழையும் பயணிகளை மகிழ்வித்தது.
இதுதொடர்பாக பயணி கள் சிலர் கூறும்போது, “ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொழுது போக்க ஏற்காடு வந்தோம். இங்கு நிலவும் சீதோஷ்ணம், இயற்கையின் அழகு எங்களை சிலிர்க்க வைத்துள்ளது.
எனினும், படகு சவாரிக்கு தடை நீடிப்பதால் ஏமாற்றம் அடைந்தோம். இ-பாஸ் நடைமுறையை நீக்கி, படகு சவாரிக்கு அனுமதி அளிக்க வேண்டும்’என்றனர்.அண்ணா பூங்காவில் நேற்று பார்வை யாளர்கள் கட்டணமாக ரூ.35 ஆயிரம் வசூலானது. பயணிகள் பலர் கார்களில் வந்ததால், மலைப் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.