திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் ர.மோகன்தாஸ்(70). இவரது மனைவி சுமதி(65), மகன் பாலாஜி (39). பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் பாலாஜி, தன் மனைவி, மகளுடன் மாடியில் வசித்து வரும் நிலையில், மோகன்தாஸும், சுமதியும் கீழ்த்தளத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வரை தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய நிலையில், நேற்று காலை மோகன்தாஸின் வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதையடுத்து, பாலாஜி சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் உள்ளே மோகன்தாஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி சுமதி தரையிலும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின்பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் அங்குசென்று, இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மோகன்தாஸின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தங்களின் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.