Regional02

151-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் விழா குரூஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் மரியாதை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி நகரின் தந்தை என்று போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் விழா அரசு விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 15.11.1869-ல் தூத்துக்குடியில் பிறந்தார். தூத்துக்குடி நகராட்சி்த் தலைவராக 5 முறை பதவி வகித்தார். தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கப்பல்கள் மற்றும் ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்தார். மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து முதல் முறையாக தூத்துக்குடி நகருக்கு குடிநீர் கொண்டு வந்த பெருமைக்குரியவர். இதனால் தூத்துக்குடி நகர மக்களால் தந்தை என போற்றப்பட்டார்.

அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடந்த 24.03.2020-ல் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி டபிள்யூஜிசி சாலையில் உள்ள குரூஸ் பர்னாந்து சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கூறும்போது, ‘‘குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிமுக அமைப்புச் செயலாளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனியாக வந்து மாலை அணிவித்தனர். திமுக சார்பில் எம்எல்ஏக்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் சி.எஸ்.முரளிதரன், மதிமுக சார்பில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், அமமுக சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் றி தாமஸ் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதுபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT