திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து புதிய ஆட்சியர் கே.செந்தில்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். 
Regional02

கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து புதிய ஆட்சியர் திருச்செந்தூரில் ஆய்வு

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர் கே.செந்தில்ராஜ் நேற்று காலை பொறுப்பேற்றார். தொடர்ந்து மாலையில் திருச்செந்தூர் சென்று கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். 12 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழா நேற்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். கோயில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதி, கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கந்தசஷ்டி விழா 12 நாட்கள் நடைபெறும். வரும் 20-ம் தேதி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாது. கோயில் பிரகாரத்தில் நடைபெறும். அதுபோல 21-ம் தேதி திருக்கல்யாணமும் பிரகாரத்தில் நடைபெறும். இந்நிகழ்வுகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக செய்யப்படுகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், கோட்டாட்சியர் தனப்பிரியா, கோயில் இணை ஆணையர் கல்யாணி, வட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT