Regional01

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பியவர்களால் சேலம் மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையைக் கொண் டாடுவதற்காக வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் பணி புரிவோர் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் சொந்த ஊர் திரும்பியதால் நேற்று சேலம் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த ஏழு மாதமாக கரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. தற்போது பல்வேறுகட்ட தளர்வுகளுடன் பொது போக்குவரத்து இயக்கப்படுகிறது. ஆனாலும் கரோனா அச்சம் காரணமாக, வெளி மாநிலம், மாவட்டங்களில் பணியாற்றும் இளைஞர்கள் இரண்டு சக்கர வாகனம், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

பெங்களூருவில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை செல்பவர்களும், கோவையில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை செல்பவர்களும் சேலம் மாவட்டத்தை கடந்தே செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, சென்னையில் இருந்து கோவை, பெங்களூருவுக்கு செல்பவர்களும் சேலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், நேற்று பகல் 11 மணியில் இருந்து மாநகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள், கார்களின் எண்ணிக்கை அதிகரித்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது.

சேலம் அண்ணாபூங்காவில் இருந்து நான்கு ரோடு, ஐந்து ரோடு செல்லும் மேம்பாலங்களில் நீண்ட வரிசையில் கார், மோட்டார் சைக்கிள்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல, புறவழிச் சாலைகளில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக மோட்டார் சைக்கிளில் உடமைகளை கட்டிக் கொண்டு தீபாவளி கொண்டாட சொந்த ஊர் திரும்பினர். ஒட்டு மொத்தமாக மக்களின் கூட்ட நெரிசல் சாலைகளில் பெருக்கெடுத்ததால், போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போலீஸார் திணறினர்.

மேலும், புதிய ஆடை வாங்கவும், பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்றதன் காரணமாக சாலை எங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

SCROLL FOR NEXT