Regional03

பருவ மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார் தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவி த்தார். நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த வாரம் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக 36 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மண்டலக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் துறை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்கெனவே இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏதும் வந்தால் இந்த குழுவினர் மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதுபோல் மாநகராட்சி பகுதியில் ஆணையர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுதல், மரங்கள் முறிந்து விழுந்தால் வெட்டி உடனடியாக அகற்றுதல், மின் தடை ஏற்பட்டால் சரி செய்தல் போன்றவை குறித்து முன்கூட்டியே ஆலோசித்து அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோல் காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர். எத்தகைய பலத்த மழை பெய்தாலும், அதனை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நீர் நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

குலேசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் இன்னும் 3 மாதங்களில் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பணிகளை இஸ்ரோ தொடங்கும் என்றார்.

SCROLL FOR NEXT