சிறப்பாகப் பணிபுரிந்த மதுரை டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் களுக்கு மத்திய அரசு விருது வழங்கப்படுகிறது.
மத்தியப் படையான சிஐஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகிய படைப்பிரிவினருக்குச் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘உத்கிருஷ்ட சேவா படக்’ என்ற விருது வழங்கப்படுகிறது. இதேபோல் மாநிலங்களின் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிவோருக்கும் இவ்விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகத்தில் எவ்விதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் 18 மற்றும் 25 ஆண்டுகள் சிறப்பாகப் புலனாய்வு, பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய 2 காவல் கண்காணிப்பாளர்கள், 20 டிஎஸ்பிக்கள், 40 காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் என 274 பேருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இதில் 18 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு ‘உத்கிருஷ்ட சேவா படக்’ விருதும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு ‘அதி- உத்கிருஷ்ட சேவா படக்’ விருதும் வழங்கப்படுகிறது.
மதுரை நகர் போக்குவரத்து உதவி ஆணையர் திருமலைக் குமார், நகர் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், ஆள் கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமா மாலா, சமயநல்லூர் காவல் ஆய்வாளர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட உளவுப் பிரிவு (எஸ்பிசிஐடி) காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோரும் மத்திய அரசு விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தென் மாவட்ட அளவில் விருது பட்டியலில் இடம் பெற்ற ஒரே டிஎஸ்பி திருமலைக்குமார்.
இவர்களுக்கு விரைவில் விருது வழங்கப்படும். மதுரை நகரில் விருது பெறத் தேர்வானவர் களை காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, புறநகரில் விருதுக்கு தேர்வானவர்களை டிஐஜி ராஜேந்திரன், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் பாராட்டினர்.