மதுரையில் தீபாவளிக்காகப் புத்தாடைகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த மாநகராட்சியும், வியாபார நிறுவனங்களும் போதிய வசதிகளை செய்து தரவில்லை.இதனால் மக்கள் சிரமப்பட்டனர்.
தீபாவளியையொட்டி தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்தோடு புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, காமராஜர் சாலைகளில் குவிந்து வருகின்றனர். அதனால் ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள், பாத்திரக் கடைகள், மளிகைக் கடைகளில் திருவிழா போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆனால் தீபாவளி பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு, வியாபார நிறுவனங்களும், மாநகராட்சியும் போதிய வசதி செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக எந்த வணிக நிறுவனங்களிலும் கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் வசதியில்லை. அதனால், வாடிக்கையாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள் முன் கார்கள், இரு சக்கர வாகனங்களை நீண்ட வரிசையாக நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
அதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியவில்லை. கடைகள் முன்பும் வாகனங்களை நிறுத்துவதால் வியாபாரிகளும் கடைகளில் இருந்து வெளியே வர முடியவில்லை. அதேபோல் வாகனங்களை மீண்டும் எடுக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
கழிப்பிடம் செல்வதற்கு மாநகராட்சி வசதி செய்து கொடுக்கவில்லை. வியாபார நிறுவனங்களில் உள்ள கழிப்பிடம் போதுமானதாக இல்லை. அதனால், மக்கள், சாலைகளை கழிப்பறைகளாகப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக மதுரை மாநகரில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்களில் துர்நாற்றம் வீசுகின்றன.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆங்காங்கே தேவையான நிரந்தர கழிப்பிட அறைகள் உள்ளன. அதை மக்கள் பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை. பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் பிரம்மாண்ட கார் நிறுத்தம் கட்டப்படுகிறது. அது செயல்பாட்டுக்கு வந்த பிறகு இந்த பிரச்சினை ஏற்படாது ’’ என்றனர்.