மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் வரப்பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயிலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். அதன்படி, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துணை ஆணையர் ராமசாமி தலைமையில் நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை ஆய்வர் ஜெயலட்சுமி, கண்காணிப்பாளர்கள் அங்கயற்கண்ணி, கர்ணன் ஆகியோர் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கம் ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்து 911, தங்கம் 156 கிராம், வெள்ளி ஒரு கிலோ 265 கிராம் வரப்பெற்றது.