அரசியல் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்துவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திமுகவினரின் ஆட்சிக் காலத்தில், மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர். திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வரவே பயந்தார்.
தற்போது பிகார் தேர்தல் காரணமாக வெங்காயம் கொண்டு வர முடியாததால், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறை தேர்தலை அதிமுக ஆட்சியில் 2 முறை நடத்தி உள்ளோம்.
திமுக ஆட்சிக் காலத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. அதிமுக அரசின் வளர்ச்சித் திட்டங்களை நேரில் பார்த்துவிட்டு பின்னர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும்.
கரோனா தொற்று காலத்தில் பாஜகவினர் வேல் யாத்திரையைத் தவிர்த்திருக்கலாம். அரசியல் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பாஜக தலைவர் முருகன் வேல் யாத்திரையை நடத்தி வருகிறார். இது அரசியலுக்காகத்தான். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.