‘பாரத் நெட்' திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலில் நடக்கிறது. இது கூடத் தெரியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குழந்தைத் தனமாகப் பேசி வருவதாக, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பேரிடர் காலத்தில் அரசு இயந்திரம் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எல்லை தாண்டி வாய்க்கு வந்தபடி பேசுவது, அவரது இயலாமையைக் காட்டுகிறது. திமுக ஆட்சியில் செய்த ஒரே சாதனை தமிழகத்தை இருளில் மூழ்கடித்ததுதான். அப்பாவி மக்களின் நிலங்களை அபகரித்து, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என சட்டம், ஒழுங்கைச் சீரழித்தது. இதுதான் திமுக ஆட்சியின் அடையாளம். அதுமட்டுமல்லாது 2ஜி ஊழலை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. கருணாநிதியின் மகன் என்ற தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் அங்கீகாரம் பெற ஏதோ காந்தி போலவும், புத்தர் போலவும் ஸ்டாலின் பேசி வருவதை மக்கள் எள்ளி நகையாடி வருகின்றனர்.
பாரத் நெட் தமிழகத்துக்கு வந்தால் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாகும். இந்தத் திட்டத்தை தடுக்கும் உள்நோக்கத்துடன் ஸ்டாலின் களங்கம் கற்பிக்க முயற்சித்து வருகிறார். மத்திய அரசு வழிகாட்டுதல்படிதான் பாரத்நெட் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இது புரியாமல் ஸ்டாலின் குழந்தைத் தனமாகப் பேசி வருகிறார். இவ் வாறு அவர் கூறினார்.