தூத்துக்குடியைச் சேர்ந்த இளம் பெண் கோவை கல்லூரியில் நடந்த செய்முறை தேர்வில் பங்கேற்ற நாளில் தூத்துக்குடியில் அவருக்கும், இளைஞர் ஒருவ ருக்கும் திருமணம் நடந்ததாகப் பதிவுச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர், சார்பதிவாளர் பதி லளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நான் பிளஸ் 2 படித்தபோது டார்வின் என்பவர் அறிமுகமானார். அவர் என்னை ஒருதலையாகக் காதலித்தார். பின்னர் நான் கோவை கல்லூரியில் பி.டெக். படிப்பில் சேர்ந்தேன்.
இந்நிலையில் அவருக்கும், எனக்கும் தூத்துக்குடி ஆலயத்தில் 8.8.2017-ல் திருமணம் நடந்ததாக கீழூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். இது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற்றபோது, போலி ஆவணங்களை பயன்படுத்தி லூர்தம்மாள் ஆலயத்தில் எனக்கும், அவருக்கும் திருமணம் நடைபெற்றதாகக் கூறி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
அந்த ஆவணங்களுடன் பங்குத் தந்தையின் சான்றிதழும் இணைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி பங்குத் தந்தையிடம் விசாரித்தபோது அதுபோன்ற சான்றிதழை தான் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், திருமணம் நடந்த தாகக் கூறப்படும் நாளில் நான் தூத்துக்குடியிலேயே இல்லை. கல்லூரியில் செய்முறை தேர்வில் பங்கேற்றேன். அதற்கான ஆன் லைன் வருகைப் பதிவேடு உள் ளது. இந்நிலையில், போலி திரு மணப் பதிவு அடிப்படையில் தன் னுடன் வந்து வாழுமாறு டார்வின் என்னை மிரட்டுகிறார்.
கீழூர் சார் பதிவாளர் அலு வலகத்தில் வழங்கப்பட்ட திருமணப் பதிவு சான்றிதழை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளரிடம் மனு அளித்தேன். அவர் எனது மனுவை நிராகரித்துவிட்டார். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டப் பதிவாளர், கீழூர் சார்பதிவாளர் மற்றும் டார்வின், புன்னைக்காயர் புனித சேவியர் ஆலய பங்குத்தந்தை பிராங்கிளின் ஆகியோர் நவ.30-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.