பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
விருதுநகரில் செய்தியாளர் களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: கரோனா பரவலை கட்டுப்படுத்த நாளொன்றுக்கு 103 காய்ச்சல் முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்பட்டன. இதில் 4,55,825 பேர் பங்கேற் றனர். கரோனா தடுப்பு மருந்து வந்தால் மக்களுக்கு அரசு சார்பில் மருந்து வழங்கப்படும்.
முதல்வரின் சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 8,250 மனுக்கள் பெறப்பட்டு 4,131 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 5,762 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவலால் தொழில்கள் பாதிக்கப்பட்டதால் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உதவிகளை வழங்கினோம். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாது காப்பு அளிப்பதில் தமிழக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. தற்போது உடல் உழைப்பு நல வாரியத்தின் கீழ் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருகின்றனர். இதில் சுமார் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப் பெட்டித் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனியாக அவர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்படும். இவ் வாறு அவர் கூறினார்.