கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா நேற்று (11-ம் தேதி) திறக்கப்பட்டதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் சேர்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் வனப்பகுதியுடன் இணைந்த குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், நரி, முதலை, பாம்பு உள்ளிட்ட ஏராளமான விலங்குகளும், மயில், வெள்ளை மயில், கூழைக் கடா என பலவகை பறவைகளும் உள்ளன. இப்பூங்கா சேலம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக பூங்கா மூடப்பட்டிருந்தது. தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று பூங்கா திறக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து வரும் பார்வையாளர்கள் மட்டும் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பூங்கா நுழைவு வாயிலில் கிருமிநாசினி கலக்கப்பட்ட நீரில் பார்வையாளர்கள் கால்களை நனைத்த பின்னர் உள்ளே செல்லவும், பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கை கழுவுதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஏராளமான பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்திருந்தனர்.