மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை உபரிநீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்துக்காக மேட்டூர் அடுத்த திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை சேலம் ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:
மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்துக்காக, ஒவ்வொரு கிராமத்திலும் யாருடைய நிலம், எவ்வளவு நிலம் எடுக்கப்படுகிறது என்ற விவரங்கள் அரசிதழிலும், உள்ளூர் நாளிதழிலும் வெளியிடப்படும்.
நில உரிமையாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படவுள்ளது. மேலும், அந்தந்த பகுதி விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளித்து இத்திட்டத்துக்கு குழாய் பதிக்க முழு மனதுடன் விளை நிலங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத் துறை சரபங்கா வடிநில கோட்ட உதவி பொறியாளர் வேதநாராயணன், வட்டாட்சியர் சுமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.