Regional01

பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கணக்கு பதிவேடு வழங்கியதில் ரூ.2 கோடி முறைகேடா? உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கணக்குப் பதிவேடுகள் வழங்கியதில் ரூ.2 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உசிலம்பட்டியைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி, உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டத்தில் உள்ள 750 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங் களுக்கு வரவு-செலவு கணக்குகளைப் பதிவு செய்ய ஆவின் சார்பில் தலா 3 பதிவேடுகள் வழங்கப்பட்டன. இதன் விலையாக ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் ரூ.2,688 எடுக்கப்பட்டுள்ளது. மூன்று கணக்கு பதிவேடுகளுக்கு ரூ.2,688 செலுத்த வேண்டும் என தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் உள்ள ஆவின் உத்தரவிட்டது.

மூன்று கணக்கு பதிவேடுகளுக்கு ரூ.2,688 வீதம் சுமார் ரூ.2.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளது. இதில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத் துறைக்கு மனு அனுப்பினேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கணக்குப் பதிவேடு நோட்டு வழங்கியதில் சுமார் ரூ.2 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி நிஷா பானு முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பால் வளத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தர விட்டார்.

SCROLL FOR NEXT