மதுரையில் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியில் பொதுமக்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை ஜெ. பேரவை சார்பில் அதன் மாநிலச் செயலாளரும், புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டத்துக்கு அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கின்றன. ரூ.30 கோடியில் ஆட்சியர் அலுவலகம், ரூ.1,200 கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள், ரூ.1000 கோடியில் பறக்கும் சாலை பணி, மாட்டுத்தாவணியில் இருந்து கூடல்நகர் வரை ரூ.50 கோடியில் சாலைகள், ரூ.380 கோடியில் வைகை கரையோரம் சாலைகள் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. ஆனால் கடந்த கால திமுக ஆட்சியில் பெயர் சொல்லக் கூடிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. 2006-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மதுரை வந்தபோது மர்ம நபர் அவரைத் தாக்க முயற்சித்தார்.
அதன்பிறகு, திமுக ஆட்சிக் காலத்தில் அவர் மதுரைக்கு வரவே அஞ்சினார்.
பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன்தான் ஸ்டாலின் சுதந்திரமாக, அச்சமின்றி மது ரைக்கு வந்து செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.