வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் மத்திய சாலை ஆராய்ச்சிக் கழக நிபுணர் குழுவினர் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
Regional03

குறுகிய காலத்தில் அடிக்கடி சேதம் வல்லநாடு ஆற்றுப்பாலத்தை நிபுணர்கள் ஆய்வு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணிஆற்றுப்பாலத்தில் மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகநிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் பாலத்தை சீரமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயானதேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது

இந்த நான்குவழிச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள நான்குவழிப் பாலத்தை கடந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இந்தப் பாலம் கட்டப்பட்டு 4 ஆண்டுகளிலேயே சேதமடைந்தது. கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலத்தின் ஒருபகுதியில் நடுவே பெரிய ஓட்டை விழுந்தது.இதனால் சுமார் 6 மாத காலம் இந்தப்பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் ரூ.3.14 கோடி ஒதுக்கப்பட்டு பாலம்சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 14-ம் தேதி பாலத்தின் மற்றொரு பகுதியில் 2 ஓட்டைகள் விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 8 மாதங்களாகஅந்த வழியாக போக்குவரத்து நடைபெறவில்லை.

பாலம் அடிக்கடி சேதமடைவதால், அதன் கட்டுமானத்தின் தரம் குறித்து பல்வேறு தரப்பினரும்சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து பாலத்தின்தரம், பலம் ஆகியவற்றை ஆய்வு செய்யதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.

அதன்படி மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகநிபுணர் கோயல் தலைமையில் 12 பேர் கொண்டகுழுவினர் ராட்சத இயந்திரங்களுடன் வந்து வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் கடந்த 8-ம் தேதி முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாலத்தின் பல்வேறு பகுதிகள், தூண்களில்துளையிட்டு மாதிரிகளை சேகரித்து பாலத்தின் பலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வு இன்றும் (நவ.11 தொடர்கிறது.

அதன் பிறகு அவர்கள் பாலத்தின் தரம்,பலம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள். இதன் அடிப்படையில் வல்லநாடு பாலத்தை சீரமைப்பதாஅல்லது புதிதாக அமைப்பதா என்பதுகுறித்து முடிவு செய்யப்படும் என ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் பாலத்தில் ஓட்டை விழுந்த பகுதிகளை தற்காலிகமாக சீரமைத்து போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக ஆய்வுக் குழுவினர் இன்று மாலை ஆய்வு முடிந்ததும் அறிக்கை அளிப்பார்கள் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT