திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழாவைபாரம்பரிய முறைப்படி நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 235 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை பாரம்பரியப்படி நடத்த வேண்டும். சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்த வேண்டும். சிறு, குறு வியாபாரிகள் தடையின்றி வியாபாரம் செய்ய வழி செய்ய வேண்டும்.
சிலை கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்ட இணை ஆணையர் பரஞ்ஜோதியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நேற்றுஉண்ணாவிரதம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் போலீஸார் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்தனர். ஆனால், அரசுவிருந்தினர் மாளிகை சாலையில்காஞ்சி மடம் அருகே இப்போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என பாஜகவினர் அறிவித்ததையடுத்து அப்பகுதியில் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காக பாஜகவினர் அங்குள்ள தனியார் திருமணமண்டபத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்களை ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜகவினர் அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
பாஜக மாவட்டத் தலைவர்பி.எம்.பால்ராஜ், பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன், மாநில மகளிரணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 124 பெண்கள் உள்ளிட்ட 235 பேரை போலீஸார் கைது செய்தனர்.