மதுரையில் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் முகக்கசவம் அணிந்து செல்வதை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, திலகர்திடல், விளக்குத்தூண் காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா நெட்வொர்க்கை பயன்படுத்தி, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் மக்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்படும். இந்த புகைப்படங்களை ஆண்ட்ராய்டு போன் அப்ளிகேஷன் உதவியோடு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் மொபைல்போனுக்கு அனுப்பும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த புதிய முறையை திலகர்திடல் காவல் நிலையத்தில் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது: முகக்கவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுபடுவோரை ஆதாரத்துடன் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த மென்பொருள் உதவும். சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக இரு காவல் நிலைய எல்லையிலுள்ள 40 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், துணை ஆணையர் சிவபிரசாத், தொழில்நுட்பப் பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரவடிவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.