தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் 40 பேருக்கு அமைச்சர் செங்கோட்டையன் ரூ.78 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கினார்.
தேசிய பள்ளிகள் விளை யாட்டுக் குழுமம் சார்பில் மாநில அளவில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங் கனைகள் மூலம் தமிழக அணி தேர்வு செய்யப்படுகிறது. இந்த அணியானது தேசியப் போட்டி களில் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றால் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இதில் தங்கப்பதக்கம் பெற்றவர் களுக்கு ரூ.2 லட்சம், வெள்ளிப் பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.1.50 லட்சம், வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.
இதன்படி 2018-19-ம் ஆண்டில் 64-வது தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டுக் குழுமப் போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் பள்ளி கல்வித் துறை சார்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார்.
மதுரை மாவட்டத்தில் 10 வீரர்கள், 30 வீராங்கனைகள் பதக்கம் பெற்றுள்ளனர். மாணவர் களுக்கு ரூ.23 லட்சம், மாணவி யருக்கு ரூ.55 லட்சம் என மொத்தம் ரூ.78 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங் கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
எம்எல்ஏக்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, கே.மாணிக்கம், பி.நீதிபதி, எஸ்.எஸ். சரவணன்,
பெ.பெரியபுள்ளான் என்ற செல்வம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் செ.புண்ணியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின், விளையாட்டு விடுதி மேலாளர் கே.ராஜா, மெட்ரிக். பள்ளிகள் இணை இயக்குநர் ச.கோபிதாஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன், மதுரை உடற்கல்வி ஆய்வாளர் பா.செங்கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி சுடும் போட்டி
தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.3 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கினார். மாணவியைப் பயிற்சியாளர் ராமச்சந்திரன், மதுரை ரைபிள் கிளப் செயலர் வேல்சங்கர் ஆகியோர் பாராட் டினர்.