ஈரோடு பர்கூர் மலைப்பாதையில் பயணித்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இப்பகுதியில் உள்ள தம்புரெட்டி மலைக்கிராமத்தைச் சேர்ந்த 15 பேர், அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு என்ற இடத்திற்கு தோட்ட வேலைக்காக நேற்று காலை ஒரு காரில் சென்றனர். மணியாச்சிப் பள்ளம் என்ற இடத்தில் மலைப்பாதையில் கார் வந்த போது, சாலையில் இருந்து விலகி கவிழ்ந்தது. இதில் தேவராஜ் (45), சிக்கணன் (45), தொட்டப்பி (45), ஜோகன் (35) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 11 பேர் ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லை
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசிப்போர் வேலைக்காகவும், மருத்துவம் உள்ளிட்ட இதர தேவைகளுக்கும் அந்தியூர் வர வேண்டியுள்ளது. மலைக் கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்பதால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் வேன்களில் ஆபத்தான முறையில் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்தியூரில் கரும்பு நடும் பணிக்காக ஒரு காரில் 15 விவசாயத் தொழிலாளர்கள் பயணித்த நிலையில், மலைப்பாதையில் நிலை குலைந்து நேற்றைய விபத்து நடத்துள்ளது.
டி.ஆர்.ஓ. எச்சரிக்கை
விபத்து நடந்த பகுதியை ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். கவிதா மற்றும் எஸ்பி தங்கதுரை ஆகியோர் பார்வையிட்டனர். டி.ஆர்.ஓ. கவிதா கூறும்போது, ‘மலைக் கிராமத்திலிருந்து வேலைக்காக கீழ்ப்பகுதிக்கு வருபவர்களை அழைத்து வரும் வாகனங்கள், 5 முதல் 7 நபர்களை மட்டுமே ஏற்றி வரவேண்டும். இதனை மீறி 15 பேரை ஏற்றி வந்ததாலேயே விபத்து நடந்துள்ளது. வாகனங்களில் விதிமுறைகளை மீறி கூடுதல் நபர்களை ஏற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், மலையிலிருந்து கீழிறங்குபவர்கள் வசதிக்காக குறிப்பிட்ட நேரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு பரிந்துரைக்கப்படும்.33 மலைக்கிராம மக்கள் சிகிச்சை பெறும் வகையில், அந்தியூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்’ என்றார்.