தென்காசி மாவட்டம் பாவூர்சத் திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை சுங்கச் சாவடிகள் தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டிருந்தார். அதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்துள்ள பதில்:
மதுரை முதல் கன்னியாகுமரி வரை கப்பலூர், எட்டூர்வட்டம் (சாத்தூர்), சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை கப்பலூர்- ரூ.256.71 கோடி, எட்டூர்வட்டம்- ரூ.271.05 கோடி, சாலைப்புதூர்- ரூ.274.58 கோடி, நாங்குநேரி- ரூ.276.75 கோடி என்று, 4 சுங்கச்சாவடிகளிலும் மொத்தம் ரூ.1,079 கோடி சுங்கவரி வசூலிக்கப்பட்டுள்ளது.
நான்குவழிச் சாலை அமைப்பதற்கான முதலீட்டு தொகை மற்றும் பராமரிப்பு செலவுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும் வரை சுங்கச்சாவடிகளில் வசூல் தொடரும். தற்போதைக்கு இந்த சுங்கச் சாவடிகளை மூடுவது குறித்து எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
புதிய சாலை கிடையாது
மேலும், சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விருதுநகரில் இருந்து சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, பணகுடி வழியாக கன்னியாகுமரி வரை உள்ள நான்கு வழிச்சாலை பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை. சாலை சரியாக பராமரிக்கப்படாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர்.