பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகபுரத்தில் குருசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் குருசாமியின் மகன் கலையரசன் (20) நேற்று வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, கிணற்றில் ஏதோ விழும் சத்தம் கேட்டதால், கலையரசன் விரைந்து சென்று பார்த்துள்ளார்.
கிணற்றில் ஒரு சிறுமி தத்தளித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது.
சிறிது ஆழத்துக்கு மட்டுமே படிக்கட்டு இருந்தது. அதன் வழியாக இறங்கிச் சென்ற கலையரசன், பின்னர் கிணற்றுக்குள் குதித்து, சிறுமியை மீட்டு ஒரு திண்டில் அமர வைத்தார்.
பின்னர், இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர்கள் ரமேஷ், சுந்தர்ராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் செல்வன், ராஜ்குமார் ஆகியோர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். கிணற்றில் தத்தளித்த சிறுமி மற்றும் இளைஞரை மீட்டனர்.
அந்த சிறுமி, செல்வவிநாயக புரத்தைச் சேர்ந்தவர் என்பதும், 16 வயதான அவர், ஏதோ பிரச்சினையால் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. பெற்றோர் சிறுமியை அழைத்துச் சென்றனர்.