திருச்செந்தூரில் சமீபத்தில் மரணமடைந்த தனிப்பிரிவு தலைமை காவலர் செல்வமுருகன் குடும்பத்துக்கு உதவும் பொருட்டு சக காவலர்கள் திரட்டிய ரூ.14 லட்சம் நிதியுதவியை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். 
Regional02

திருச்செந்தூரில் மரணமடைந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் நிதியுதவி சக காவலர்கள் இணைந்து வழங்கினர்

செய்திப்பிரிவு

திருச்செந்தூரில் சமீபத்தில் மரணமடைந்த தனிப்பிரிவு தலைமைக் காவலர் செல்வமுருகன் குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் சக காவலர்கள் திரட்டிய ரூ.14 லட்சம் நிதியுதவியை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்த செல்வமுருகன் கடந்த 01.10.2020 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவர் 1999-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி இறுதியாக 14.07.2020 முதல் திருச்செந்தூர் தாலுகாக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

மறைந்த செல்வமுருகன் குடும்பத்துக்கு நிதியுதவி செய்யும் பொருட்டு அவருடன் 1999-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள 2,750 காவலர்கள் இணைந்து ரூ.14,09,700 நிதி திரட்டினர். அந்த நிதியை செல்வமுருகனின் மனைவி அருணா (43), மகன்கள் கமலேஷ் (18) மற்றும் அகிலேஷ் வர்ஷன் (8) ஆகியோருக்கு காசோலையாக வழங்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்று, செல்வமுருகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிதியுதவியை வழங்கினார். மேலும், இந்த நிதியை திரட்டுவதற்கு 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர் குழுவை ஒருங்கிணைத்த சென்னை தலைமை காவலர் சபரிநாதன், தூத்துக்குடி தலைமை காவலர்கள் பிச்சையா, தாமோதரன், சரவண செல்வன், செந்தில் ஆறுமுகம், பாலகிருஷ்ணன் மற்றும் வள்ளிநாயகம் ஆகியோரை எஸ்பி பாராட்டினார். டிஎஸ்பி (பயிற்சி) சஞ்சீவ் குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 1999-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT