TNadu

பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனி ஒதுக்கீடு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. இதேபோல் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கேட்டு இளையான்குடியைச் சேர்ந்த குறளரசன் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில், தமிழகத்தில் உள்ளமருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. 2015 முதல்2020-ம் ஆண்டு வரை முன்னாள்ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்காக எத்தனை சீட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன? முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்தனர்? அவர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை நவ.20-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT