பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து வரும் 11-ம் தேதி முதல்வரிடம் தெரிவிப்போம். அதன் பிறகு அவர் ஆலோசனை செய்து நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மதுரை உட்பட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 450 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங் கினார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 2,505 மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் வழங்கும் அனுமதி ஆணை வெளிப்படையாக நடைபெற்றுள்ளது. மக்களை நாடி அரசு வருகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பள்ளி நடத்துவோரை தேடிவந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் இந்தாண்டு 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல் 15,482 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி ஆன்லைன் மூலம் வரும் 9-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் ஐஐடி பயிற்சியும் தொடங்க உள்ளது.
நடப்பாண்டில் அரசு பள்ளி களில் 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
தற்போது கல்வித் தொலைக் காட்சியில் 60 சதவீத பாடங்கள் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான பாடத் திட்டங்களை முதல்வர் பழனிசாமி விரைவில் வெளியிடுவார். பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து வரும் 11-ம் தேதி முதல்வரிடம் தெரிவிப்போம். அதன்பிறகு அவர் ஆலோசனை செய்து நல்ல முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.