2018-19-ம் ஆண்டுக்கான 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தின் சார்பாக தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்று பரிசுகளை வென்ற 9 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமை வகித்தார்.
அதன்படி, தங்கப் பதக்கம் வென்ற எஸ்.அஜித்குமார் (கைப்பந்து), பி.பாலாஜி (கைப்பந்து), எஸ்.தனு (இறகுபந்து), ஆர்.ஸ்வேதா (கடற்கரை கைப்பந்து), ஆர்.சிவதர்ஷினி(சிலம்பம்) ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற டி.கவியரசு(இறகுபந்து) ஆர்.தரணி (வலைப்பந்து) ஆகியோருக்கு தலா ரூ.1.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற எஸ்.அகிலாண்டேஸ்வரி(சிலம்பம்), எம்.சினேகா (சிலம்பம்) ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும் என 9 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலைகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கி, பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.அரவிந்தன், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.ராமகிருட்டிணன், மாவட்டக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சு.அந்தோணி அதிர்ஷ்டராஜ், உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.