Regional03

தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கருத்து

செய்திப்பிரிவு

தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமான பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ்கிறது. விரைவாகவும், உறுதியாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இத்தகைய கரோனா காலகட்டத்தில் எந்தவொரு வளர்ச்சித் திட்டப் பணிகளிலும், விவசாய பணிகளிலும் எந்த வகையிலும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு, வளர்ச்சித் திட்டப்பணிகளை மக்கள் பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் நேரில் ஆய்வு செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவது அதிமுக அரசு மட்டும்தான். வரலாற்றிலேயே இல்லாத வகையில் 2011-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து சாதனை புரிந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 308 நாட்கள் தொடர்ந்து மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் இருந்தது இந்த முறைதான். இது வரலாற்றில் நடந்திராத ஒன்று. நீர் மேலாண்மையின் பலனை விவசாயிகள் தற்போது பெற்று வருகின்றனர். மக்களின் பாராட்டுகளை நாங்கள் பலனாக பெற்றுள்ளோம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.

SCROLL FOR NEXT