தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கணொலியில் பொதுக்கூட்டம் நடத்திய கனிமொழி எம்பி மற்றும் 3 எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 3,500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் காணொலி மூலம் திமுகவினருடன் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காணொலி தேர்தல் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 216 இடங்களில் இந்த காணொலி கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடிதொகுதி எம்பி கனிமொழி, எம்எல்ஏக்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சண்முகையா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி அதிகமானோர் கூடியதாக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் திமுகவினர் மீது மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனிமொழி எம்பி, 3 எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 3,500 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் பரவும் விதமாக கவனக்குறைவாக நடத்தல், தடையுத்தரவை மீறுதல் மற்றும் தொற்றுநோய் பரவல் தடை பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.